வீரமரணமடைந்த லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: தமிழக அரசு நிதி உதவி அறிவிப்பு



காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இன்று தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது பார்கல் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியை தாண்டி செல்ல தீவிரவாதிகள் முயற்சி செய்தனர். அப்போது இந்திய ராணுவ வீரர்கள் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவம் தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் பேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இதில், லட்சுமணன் மதுரை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன்.

தாய் நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெர்வித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

x