வைகை வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வீரர் 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு: கதறித் துடித்த கர்ப்பிணி மனைவி


வினோத்குமார்

வைகை வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வீரர், மூன்று நாட்களுக்குப் பின் இன்று அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதைக்கண்டு அவரது கர்ப்பிணி மனைவி கதறித் துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதிகரித்து வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை திருமங்கலம் அருகிலுள்ள கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான வினோத்குமார் (25) அவரது நண்பர் அன்பரசன் (25) உள்ளிட்ட மேலும், 4 பேர் சோழவந்தான் திருவேடகம் பகுதியிலுள்ள வைகையாற்று தடுப்பணை பகுதியில் ஆக.9-ம் தேதி மதியம் குளித்தனர்.
அப்போது, தடுப்பணை சுவரில் நடந்த சென்ற அன்பரசன், வினோத்குமார் ஆகியோர் எதிர்பாராத விதமா தவறி விழுந்ததில் நீர் சுழலில் சிக்கினர். இருவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றதால் அவர்கள் தப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுபட்டி போலீஸார், சோழவந்தான், வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் தேடினர். சிறிது நேரத்தில் உயிரிழந்த நிலையில் அன்பரசன் உடல் தடுப்பணை பகுதியில் மீட்டனர். வினோத்குமாரை தொடர்ந்து இரவு, பகலாக 2 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வாடிப்பட்டி, சோழவந்தான் , மதுரை தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள், மற்றும் சென்னையில் இருந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் 3 நாளாக இன்று அதிகாலை முதல் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மேலக்கால் வைகை ஆற்றுப் பாலம் அருகே அழுகிய நிலையில், வினோத்குமாரின் உடல் காலை 6 மணிக்கு மீட்கப்பட்டது. கரைப்பகுதிக்கு உடலை கொண்டு வந்தபோது, அங்கு கூடியிருந்த அவரது கர்ப்பிணி மனவி, குடும்பத்தினர், உறவினர்கள் அனுப்பப்பட்டி கிராமத்தினர் அழுத காட்சி சோகத்தை உருவாக்கியது.
அங்கு வந்த முன்னாள் அமைச்சர், ஆர்பி உதயகுமார், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். இதையடுத்து வினோத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘ உயிரிழந்த வினோத்குமார் 7 ஆண்டுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். தற்போது ஓடிசாவில் பணியில் இருந்தார். விடுமுறைக்கு வந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றபோது, வெள்ளத்தில் சிக்கினார். அவருக்கு 9 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார் ’’ என்றனர்.

x