போதை ஏறி போச்சு: கரூரில் மதுவால் தள்ளாடிய பிளஸ் 1 மாணவிகள்


கரூர் நகரத்தின் மையப் பகுதியில் பிளஸ் 1 மாணவிகள் மூன்று பேர் மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தது அங்கிருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் அருகே இன்று மதியம் மூன்று மாணவிகள் மயங்கிய நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வந்தபோது அங்கு இரண்டு மாணவிகள் மட்டுமே இருந்தனர். அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி பரிசோதனை செய்தபோது அவர்கள் மதுமயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகள் மூவரும் கரூர் மாநகர பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால், மறு தேர்வு எழுத பள்ளி சீருடையுடன் வேறொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வந்தது தெரிய வந்தது. ஒயின் குடித்தால் நல்ல சிவப்பான நிறம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி மூவரும் குடித்துள்ளதாகவும் தெரியவந்தது.

ஒயினில் போதை வரும் என்பது தெரியாமல் குடித்து விட்டநிலையில் போதை தலைக்கேறியதால் அவர்கள் தடுமாறி வந்திருக்கின்றனர். அதைப் பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஒரு மாணவி வீட்டுக்கு கிளம்பி விட்ட நிலையில் மீதம் இருவரும் அங்கிருந்திருக்கின்றனர்.

இந்நிலையில், மாணவிகள் அவர்களாகவே ஒயின் வாங்கி குடித்தார்களா? அல்லது வேறு யாரேனும் இவர்களுக்கு வாங்கிக் கொடுத்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களின் உறவினர்களை வரவழைத்து அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

x