உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படகிலிருந்து மூழ்கிய 40 க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மார்கா பகுதியில் யமுனை ஆற்றில் இந்த படகு கவிழ்ந்தது. மார்காவிலிருந்து ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜரௌலி காட் பகுதிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் ஆற்றில் நீந்திப் பத்திரமாக கரையேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் படகில் பயணம் செய்த பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் நிறைய குழந்தைகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது. படகு விபத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.