நீதித்துறை நடுவரை அவமதித்த ஏஎஸ்பி, டிஎஸ்பி, போலீஸ்காரர்: ஐகோர்டில் வருத்தம் தெரிவித்ததால் முடிவுக்கு வந்தது அவமதிப்பு வழக்கு


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையை விசாரித்த நீதித்துறை நடுவர் அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரித்தார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்திய போது போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, தவறாக பேசினர், விசாரணையை வீடியோ பதிவு செய்தனர் என உயர் நீதிமன்றத்துக்கு நீதித்துறை நடுவர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவருக்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. நீதித்துறை நடுவர் விசாரணையை போலீஸார் வீடியோ பதிவு செய்துள்ளனர். காவலர் மகாராஜன் நீதித்துறை நடுவரை மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதனால் ஏஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் மகாராஜன் ஆகியோர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது 3 பேரையும் இடமாறுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் மூவரும் நீதித்துறை நடுவரிடம் தாங்கள் நடந்து கொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணை சரியான முறையில் செல்கிறது. இதுவரை 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இடையூறாக இருக்கக்கூடாது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிக்கப்படுகிறது. மூவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வழக்கை சட்டப்படி விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.

x