தனியார் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையைக் கீழே தள்ளிவிட்டது. இதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தை கீழே விழுந்து கிடக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அதே பகுதியில் உள்ள ஆப்பிள் கிட்ஸ் என்ற மழலை பள்ளியில் படித்து வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த 3 வயது குழந்தையிடம் அதே வகுப்பில் படிக்கும் மற்றொருகுழந்தை சண்டையிட்டு நாற்காலியில் இருந்து கீழே தள்ளியது. கீழே விழுந்த குழந்தையை தூக்காமல் ஆசிரியை அலட்சிய போக்குடன் இருக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை, வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் பள்ளியில் அடிப்பதாகவும், பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி அழுதுள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.. கீழே விழுந்த குழந்தை இரண்டு நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.