சென்னையில் பெண் காவலரின் 15 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமியின் தற்கொலைக்கு என்ன காரணமாக என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி(46). புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் காவலராக பணியாற்றி வரும் கலைவாணி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது 15 வயது மகள் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். நேற்று கலைவாணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது மகள் வயிற்று வலி காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மாலை கலைவாணி தனது மகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவலர் கலைவாணி உடனே தனது சகோதரர் குணசேகருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து குணசேகர், கலைவாணி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்ளபக்கம் தாழ்பாள் போட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த குணசேகர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி ஹாலில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கீழ்பாக்கம் போலீஸார் சிறுமி உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததால் சிகிச்சை பெற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வலி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது தெரிவந்துள்ளது. மேலும் பிளஸ்1 பாடம் மிக கடுமையாக உள்ளதால் படிப்பதற்கு சிரமமாக உள்ளது என்று சிறுமி கூறியதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சிறுமியின் தற்கொலைக்கு என்ன காரணமாக என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.