தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் நடந்துவரும் அகழாய்வுப் பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கிடைத்திருக்கிறது. இது வரலாற்று ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது சிவகளை. இங்கு கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழக அரசின் சார்பில் அகழாய்வுப்பணிகள் நடந்துவருகின்றன. இங்கு மார்ச் 3- ம் தேதி முதல் 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது.
இந்தப் பணிக்காக 22க்கும் அதிகமான குழிகள் தோண்டப்பட்டு இந்த அகழாய்வுப்பணிகள் நடந்துவருகின்றன. சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை பகுதிகளில் இருந்து இதுவரை 50க்கும் அதிகமான முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த அகழாய்வில் ஏற்கெனவே சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், புகைப்பான் உள்ளிட்ட 80 தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேபோல் சங்ககாலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் செங்கல் ஒவ்வொன்றும் 16 செ. மீட்டர் அகலம், 25 செ. மீட்டர் நீளம், 5 செ.மீ உயரமும் உள்ளது. இதேபோல் இப்போது பாக்கிரமபாண்டி திரடு பகுதியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் அது என்ன வடிவம் என்பது தெரியவில்லை. அதன் மேல் கோடு, கோடாக வரையப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏற்கெனவே தங்கம், தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டயம் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்திருக்கும் நிலையில் சிவகளையில் தங்கம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்!