அரசுப்பணிக்கான போட்டித்தேர்வில் தாய், மகன் இருவரும் ஒரேநேரத்தில் தேர்ச்சி பெற்ற ருசிகர சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரிகோடு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பிந்து(42). இவரது மகன் விவேக்(24). இவர்கள் இருவரும் அண்மையில் கேரள அரசுப்பணியாளர் (பி.எஸ்.சி) தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வை எழுதினர். இதில் இவர்கள் இருவருமே வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பிந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த பத்து ஆண்டுகளாகவே அங்கன்வாடி ஊழியராக இருக்கிறேன். என் மகன் விவேக் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனது புத்தகத்தை எடுத்து வாசித்தேன். அப்போதுதான் போட்டித்தேர்வுக்கு படிக்கவேண்டும் எனத் தோன்றியது. உடனே அங்கன்வாடி வேலைக்குச் சென்றுவிட்டு, பகுதி நேரமாக பயிற்சி மையம் சென்றேன். ஏற்கெனவே நான்குமுறை இந்தத் தேர்வை எழுதி வெற்றிபெற முடியவில்லை. டிகிரி முடித்ததும் என் மகனையும் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டேன். விவேக் போலீஸ் தேர்வுகளும் எழுதுவான். இந்தமுறை அரசுப்பணியாளர் வாரிய போட்டித் தேர்வில் இருவரும் வென்றிருக்கிறோம்” என பூரிப்போடு சொன்னார்.
பிந்து கடைநிலை எழுத்தர் தேர்வில் 38-வது இடத்திலும், விவேக் கடைநிலை ஊழியர் தேர்வில் 92-வது இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர். கேரளத்தில் போட்டித் தேர்வுகள் எழுத பொதுப்பிரிவினருக்கு 40 வயது வரை மட்டுமே எழுதமுடியும். சில தளர்வுகளின் மூலம் பிற சமூகத்தினர் கூடுதலாக சில ஆண்டுகளுக்கு எழுதமுடியும். அந்த வயது தளர்வினால் பிந்து தேர்வினை எழுதி வாகையும் சூடியிருக்கிறார்.