80 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘வெளிச்சம்’ பெறும் திரிபுரா கிராமம்!


மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? இரவுகளில் தீப்பந்தங்கள், எண்ணெய் விளக்குகள் என்று சமாளித்திருப்பார்கள். கோடைகாலத்துப் பகல் நேரங்களில் வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் வியர்வை வழிய நாட்களைக் கடத்தியிருப்பார்கள். திரிபுராவின் கோவாயி மாவட்டத்தில் உள்ள சர்கிபரா கிராமத்தில் வசிக்கும் மக்கள் இதே நிலையில்தான் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறார்கள்.

திரிபுரா மாநிலத்தில் மலைப் பகுதிகள் அதிகம். தொலைதூர கிராமங்கள் பலவற்றில் மின்சார இணைப்பே இல்லை. இருக்கும் இணைப்பிலும் பல்வேறு தடங்கல்கள் ஏற்படும் என்பதால் அம்மாநிலத்தின் பல்வேறு கிராமங்கள் இரவு நேரங்களில் இருளில்தான் மூழ்கிக்கிடக்கும். அப்படியான கிராமங்களில் ஒன்றுதான் சர்கிபரா.

மாலை நேரத்தைத் தாண்டிவிட்டால், அந்தப் பழங்குடி கிராமமே பேய் கிராமம் போல் இருண்டுவிடும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னும் மண்ணெண்ணெய் விளக்குகளும் பேட்டரி விளக்குகளும்தான் துணை. இதனால், குழந்தைகள் மாலை நேரங்களில் படிக்க முடியாது. டிவி பார்ப்பதெல்லாம் கனவுதான். செல்போன் சார்ஜ் போட முடியாது. அங்கு வசிக்கும் பழங்குடி மக்களில் நெசவாளர்கள் அதிகம். மின் இணைப்பு இல்லாததால் இரவு நேரங்களில் தறி நெய்வதெல்லாம் அவர்களுக்குச் சாத்தியமே இல்லை.

அது மட்டுமல்ல, ‘ஹாட்ஸ்’ என அழைக்கப்படும் அந்த ஊர் சந்தைகள் பகல் நேரங்களில் மட்டும் தான் திறந்திருக்கும். அதுவும் வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறைதான். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளும் அவை அழுகாமல் பார்த்துக்கொள்ள எந்த ஏற்பாடும் இல்லாமல் தவித்துவந்தனர்.

இவை அனைத்துக்கும் தீர்வாக அந்த கிராமத்துக்கு சூரியஒளி மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பகுதியளவு நிதி வழங்கும் ‘கிராமீன் பஜார் ஆலோக் ஜோதி’ திட்டத்தின்கீழ், சூரியஒளி மின்சாரத்தைப் பெறுகிறது இந்தக் கிராமம்.

சர்கிபரா உட்பட மொத்தம் 11 தொலைதூர கிராமங்களுக்கான சூரியஒளி மின்சாரம் வழங்குவதற்கான 2 கிலோவாட் மைக்ரோகிரிட் மின்நிலையத்தை அமைக்கும் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கின. ஜூலை 30-ல் பிரதமர் மோடி காணொலி வழியாக அவற்றை முறைப்படி திறந்துவைத்தார்.

இதையடுத்து, அந்தக் கிராமத்து மக்கள் இரவு நேரங்களிலும் இனி சுதந்திரமாக இயங்க முடியும் எனும் சூழல் உருவாகியிருக்கிறது.

இதேபோல் இன்னும் 50 மைக்ரோ கிரிடுகளை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும், 500 தொலைதூர கிராமங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் திரிபுரா எரிசக்தி வளர்ச்சி முகமையின் துணை இயக்குநர் தேவவிரதா சுக்லா தாஸ் உறுதியளித்திருக்கிறார்.

அதேசமயம், மலைப் பகுதிகளில் சூரியஒளி மின்நிலையத்தைப் பராமரிப்பது சவாலான காரியம் என்பதால் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் அரசு அதிகாரிகளே சுட்டிக்காட்டுகிறார்கள். எல்லாம் சரியாக நடந்து தொடர்ந்து வெளிச்சம் பெறட்டும் தொலைதூர மலை கிராமங்கள்!

x