கோவையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் ஒரு சிறுவன் பலியான சம்பவம் கோயில் திருவிழாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல். இவரது மகன் ரித்திஷ்(4). நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக தனியார் தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டது.
அந்த லாரி இன்று வந்த போது கோயில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது லாரி டயர்களுக்கு அடியில் கற்களை ஓட்டுநர் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது கோயில் அருகே ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென தானாக முன்னோக்கிச் சென்றது. அப்போது ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரித்திஸ் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரித்தீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமுகை போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரித்திஸ் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.