செல்போனில் விளையாட்டு: தாய் கண்டிப்பால் மாணவி எடுத்த விபரீத முடிவு


அதிக நேரம் அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த மகளை அவரது தாய் கண்டித்ததால் விஷம் அருந்தி மகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி வாசுகி. இந்த தம்பதிக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 4 பிள்ளைகள். காளிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், வாசுகி கூலி வேலைக்குச் சென்று தனது பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

அவருடைய 17 வயது இளைய மகள் அருகேயுள்ள தேத்தாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மொகரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அந்த மாணவி வீட்டில் அதிக நேரம் அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அதனைப்பார்த்த வாசுகி மகளை கடுமையாக திட்டியிருக்கிறார். அத்துடன் மாணவியின் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கிக் கொண்டு விட்டாராம்.

இதனால் விரக்தி அடைந்த அந்த மாணவி தாயிடம் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். பின்னர் அவரது தாய் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மாணவி வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து உட்கொண்டார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மாணவியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

x