செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற உக்ரைன், வெள்ளிப் பதக்கம் வென்ற ஜார்ஜியா, வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா ஆகிய நாடுகளின் அணி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
இதேபோல், பொதுப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பேகிஸ்தான், வெள்ளிப் பதக்கம் வென்ற அர்மேனியா, வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா ஆகிய நாடுகளின் அணி வீரர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த அறிவிப்பு அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.