பாட்டியின் 80-வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று நினைத்த அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சுமார் 80 வகை உணவுகளை ஒன்றுகூடி தயார் செய்து பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளனர்.
வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் பிறந்த நாளை விமர்சையாகவும், புதிதாகவும் கொண்டாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதிலும் ஒருவர் 100 வயது வரை வாழ்ந்துவிட்டால் அந்த நூறாவது பிறந்தநாள் விழா ஊர் மெச்சும் அளவிற்கு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் வித்தியாசமாக நடைபெற்று உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர்கள் விமலாதேவி-சுப்புராம் தம்பதியினர். 80 வயதான விமலாதேவியின் கணவர் சுப்புராம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இத்தம்பதியினருக்கு எட்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களுடன் விமலாதேவி ராமநாதபுரத்தில் வாழ்ந்து வருகிறார். தற்போது, ஐந்து தலைமுறைகளைக் கண்டுள்ள விமலாதேவியின் 80-வது பிறந்தநாளை அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதன்படி, பாட்டி எப்போதும் சமைக்கும் இயற்கை உணவுகளில் 80 வகை சைவ உணவுகளை உறவினர்கள் ஒன்றுகூடி தாங்களே தயார் செய்து பிறந்த நாளை கொண்டாடி பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உறவினர்கள் மற்றும் பேரக்குழந்தைகள் புடை சூழ தனது 80-வது பிறந்தநாளை விமலா தேவி கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.