மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததன் மூலம் திருச்சி மாநகரையே இரவில் பதைபதைக்க வைத்திருக்கிறார் போதை ஆசாமி ஒருவர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என திருச்சியில் உள்ள கன்டோன்மென்ட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.40 மணியளவில் தொலைபேசி மூலமாக மிரட்டல் அழைப்பு வந்தது. இதனால் பரபரப்படைந்த கட்டுப்பாட்டு அறையினர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மோப்பநாய் டெய்சி உதவியுடன், மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக உள் வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எந்த இடத்திலும் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் தங்கள் சோதனையை முடித்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட முழுவதும் தகவல் வேகமாக பரவியது. இதனால் மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி அழைப்பை வைத்து விசாரணையில் ஈடுபட்டு, தொலைபேசி நபரை கண்டறிந்தனர். பஞ்சப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் முழு போதையில் இந்த மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் காரணமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் நள்ளிரவு 12 மணி வரையிலும் மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது.