செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்ப வேண்டும் என செஸ் போட்டியின் இயக்குநர் பரத் சிங் சவுகான் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து விழாவை சிறப்பாக நடத்தக் காரணமாக இருந்த குழுவினர் கௌரவிக்கப்பட்டனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்க உள்ளார். அதற்கு முன்னதாக நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கத்தில் உள்ளவர்களை பரவசமடையச்செய்தன.
தமிழ்நாட்டின் விளையாட்டுகளின் படிநிலை வளர்ச்சியைக் கலை வடிவில் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டினர். தமிழர்களில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழில் உலா என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது குறித்தும், உடல் வித்தை விளையாட்டு, கபடி, பந்தாட்டம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் செஸ் விளையாட்டுப் போட்டியின் தொடக்கம் முதல் நிறைவு வரை கடந்து வந்த பாதை குறித்து காணொலி ஒளிபரப்பப்பட்டது. 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையைப் போட்டி இயக்குநர் பரத் சிங் சவுகான் வாசித்தார். அப்போது அனைத்து வீரர்களும் பத்திரமாகச் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். செஸ் விளையாட்டு சிறப்பாக அமைய காரணமாக இருந்த அமைச்சர் மெய்யநாதன், விஸ்வநாதன் ஆனந்த், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினருக்கு கௌரவிக்கப்பட்டனர்.