100 அடி ஆழம் கொண்ட புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்த போது தவறி விழுந்த இளைஞர் ஏழு நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மணலூர் ஊராட்சியில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிப்பதும், குளிப்பதும் வழக்கம். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டியன், தனது நண்பருடன் நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்று செல்ஃபி எடுத்த போது கால் தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அன்று முதல் கடந்த ஏழு நாட்களாக சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாண்டிகுடியை அடுத்து புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரக்கூடிய வழியில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் பாறைகளுக்கு இடையில் அழுகிய நிலையில் அஜய் பாண்டியன் உடல் இன்று மீட்கப்பட்டது.
இது போன்று பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.