அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்து அக்கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மாயத்தேவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த டி. உச்சபட்டியை பூர்வீகமாக கொண்டவர் கருப்பு மாயத்தேவர் என்ற மாயத்தேவர். 1934-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி பிறந்த இவர் 1962-ம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். தொடர்ந்து, அதிமுக தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.
மேலும், அதிமுக தொடங்கப்பட்ட நாளில் அதற்கு சுயேச்சை சின்னம் தான் கிடைத்தது. அதில், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சிரியாக்கிடம் இருந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்வு செய்து அதிமுக சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொடர்ந்து, 1977 மற்றும் 1980-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக அதே தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலில் இருந்து விலகிய மாயத்தேவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சிறிது காலம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று உடல் நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் சின்னாளபட்டியில் மாயத்தேவர் உயிரிழந்தார்.