கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 72 பேருக்கு ஜாமீன்: 44 பேருக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி கடும் எதிர்ப்பு


பள்ளியில் நடந்த கலவரம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களில் 72 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் 17-ம் தேதியன்று பெரும் கலவரமாக மாறியது. அதில் பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைப் போராட்டக் காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர். இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்கு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார், காவல்துறை வாகனத்திற்கு முதலாவதாக தீ வைத்ததாக சின்ன சேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பள்ளியின் பூட்டை உடைத்தவர், வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக கலவரத்தை தூண்ட காரணமானவர்கள் என 309 பேரை 14 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் சிறார்கள் பலருக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் பலரும் வேடிக்கை பார்க்க வந்தபோது கைது செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அவர்களை ஜாமீனில் எடுப்பதற்காக அவர்களின் உறவினர்கள் பெற்றோர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 296 பேர் ஜாமீன் கேட்டு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில், நேற்று நள்ளிரவு வரை நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று அவர்களில் 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸாரின் கடும் எதிர்ப்பால் 44 பேர் மீதான ஜாமீன் மனு தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

x