அசாமின் சுவல்குச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது காதலனின் எச்ஐவி பாசிட்டிவ் ரத்தத்தை தனக்குத்தானே சிரிஞ்ச் மூலம் ஏற்றிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
'காதலுக்கு கண் இல்லை’ என்பதை வாய் வார்த்தையாக கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அதனை மெய்யாக்கும் வகையில் அசாமில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சுவால்குச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது காதலனிடம் வினோதமான முறையில் காதலை நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன் காதலனின் எச்ஐவி-பாசிட்டிவ் ரத்தத்தைப் எடுத்து, தனது உடலில் ஊசி மூலம் செலுத்திக் கொண்டு , தன் உண்மையான காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹாஜோவில் உள்ள சடோலாவைச் சேர்ந்த இளைஞனுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறுமி பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது, தனது காதலன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தும் அந்த சிறுமியால் காதலை கைவிட முடியவில்லை. இதனால் இந்த சிறுமி தனது வீட்டை விட்டு பல முறை வெளியேறி காதலனுடன் சென்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு முறை அவள் தப்பிச் செல்லும் போதும் அவளுடைய பெற்றோரால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.
இந்த சூழலில்தான் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளார் அந்த சிறுமி. தன் காதலனிடமிருந்து எச்.ஐ.வி-பாசிட்டிவ் ரத்தத்தை ஒரு ஊசி மூலம் எடுத்து, அதனை தனக்குத்தானே சிரிஞ்ச் மூலம் செலுத்திகொண்டார். இந்த சம்பவம் தெரியவந்ததும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் ஹாஜோவில் உள்ள அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர். தற்போது அந்த சிறுமி மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.