பாஜகவுடனான கூட்டணியை மீண்டும் முறித்துக்கொள்ள பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஆயத்தமாகிவருவதாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இதுதொடர்பாக இன்று முக்கிய முடிவெடுக்க ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
2013-ல் பிரதமர் வேட்பாளராக மோடி முன்வைக்கப்பட்டபோது அதைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேறியவர் நிதீஷ். “இந்த நாட்டை வழிநடத்துபவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும்” என்று மோடிக்கு எதிராக அவர் முழங்கினார். “மோடியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைவிட பூமியின் அடியாழத்தில் புதைந்து மறைந்துபோவேன்” என்றும் சூளுரைத்தார். இதைத் பல்வேறு அரசியல்
2015 பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்று முதல்வரானார். எனினும், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் ஊழல்களை முன்வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்தார்.
2020 பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்த அதில் சிராக் பாஸ்வானுடன் சேர்ந்து பாஜக வகுத்த ரகசிய வியூகத்தால், 43 இடங்களில் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெல்ல முடிந்தது. அது நிதீஷை ரொம்பவே காயப்படுத்திவிட்டது. 74 இடங்களில் வென்ற பாஜக, முதல்வர் பதவியை நிதீஷுக்குத் தந்துவிட்டாலும் அவ்வப்போது அரசுக்குக் குடைச்சல்களை ஏற்படுத்திவருகிறது. பொது சிவில் சட்டம், என்.ஆர்.சி பட்டியல், பெகாசஸ் விவகாரம், சாதிவாரிக் கணக்கெடுப்பு, அக்னிபத் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்திவருகிறார். பிஹாரில் கூட்டணி ஆட்சி என்பதால், பாஜகவினரும் அமைச்சர் பதவிகளில் இருக்கின்றனர். இந்தச் சூழலில் அமித் ஷா தனக்கு நெருக்கமானவர்களை அமைச்சர் பதவியில் அமர்த்துவதில் முனைப்பு காட்டுவதாக நிதீஷ் குமார் கருதுகிறார்.
பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக்கொண்டால் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளத் தயார் என ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, சிபிஎம் (மார்ச்கிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி போன்ற கட்சிகளும் நிதீஷுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
அத்துடன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவரான ஆர்.சி.பி.சிங் விலகியிருப்பது, அக்கட்சிக்குள் பலத்த அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. பாஜகவின் தூண்டுதலால் ஆர்.சி.பி.சிங் இந்த முடிவை எடுத்ததாக நிதீஷ் கருதுகிறார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சியை உடைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்த பாஜக, பிஹாரிலும் கைவரிசையைக் காட்டலாம் எனும் அச்சம் ஏற்கெனவே நிதீஷ் குமாருக்கு உண்டு. “இனி பாஜக மட்டும்தான் அரசியல் களத்தில் நீடிக்கும். மாநிலக் கட்சிகள் மறைந்துவிடும்” என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதைப் பகிரங்கமாகக் கண்டித்தார் நிதீஷ்.
பிரச்சினை முற்றிய நிலையில் நிதீஷ் குமாரைச் சமாதானப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நிதீஷ் குமாரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். பிஹார் பாஜக தலைவர்களும் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்னொரு புறம் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.