மதுரையில் விதிமீறி கட்டிடம் கட்டுபவர்களுக்கு கிடுக்கி பிடி: மின் இணைப்பு பெற முடியாது


வரைபடம் அனுமதியில் குறிப்பிட்ட சதுர அடியில் கட்டினால் மட்டுமே குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு ‘பணி நிறைவு சான்றிதழ்’ வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால் விதிமுறை மீறல் கட்டிடம் கட்டுபவர்கள் இனி மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகர பகுதிக்குள் ஒருவர் குடியிருப்பு அல்லது வணிக நிறுவன கட்டிடம் கட்ட வேண்டுமானால், மாநகராட்சி நிர்வாகம் அல்லது உள்ளூர் திட்ட குழுமம் (எல்பிஏ) அனுமதி பெற வேண்டும். மாநகராட்சியில், குடியிருப்பு வீடாக இருக்கும் பட்சத்தில் 10 ஆயிரம் சதுர அடிவரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவும், அதற்கு மேல் உள்ளூர் திட்டகுழுமம் அனுமதி வழங்க வேண்டும்.

அதுவே வணிக நோக்க கட்டிடமாக இருந்தால், 2,000 சதுர அடி வரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடி முதல் 26 ஆயிரத்து, 500 சதுர அடி வரையிலான வணிக கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி பெற வேண்டும். அதற்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவும் ஒப்புதல் வழங்க வேண்டும்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே மாநகராட்சிப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சிப்பகுதியில் கட்டிட அனுமதி பெறும் நிர்ணயிக்கப்பட்ட சதுர அடிக்கு மேல் விதிமுறைகளை மீறி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதற்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் திரைமறைவு ஒத்துழைப்பால் விதிமுறைமீறல்கள் மறைக்கப்பட்டு கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கி அதற்கு வரி நிர்ணயம் செய்யப்படுகின்றன.

மாநகராட்சி வரி நிர்ணயம் ஒப்புதல் சீட்டு பெற்ற அடிப்படையில் மின்வாரியம் அந்த கட்டிடங்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கி வந்தது. அதனால், மாநகராட்சிப்பகுதிகளில் விதிமுறை மீறல் கட்டிடங்கள் பெருகியது. மாநகராட்சிகளுக்கும் வருவாய் இழப்பும் ஏற்பட்டது. விதிமுறை மீறல் கட்டிடக்காரர்களும் எந்த கடிவாளமும் இல்லாமல் மின் இணைப்பு பெற்று வந்தனர். இந்த முறைகேடுகள் வெளியே தெரியவரவே, தற்போது மின்வாரியத்தில் தற்போது வரைப்படத்தில் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி பணி நிறைவு சான்றிதழ்( completion certificate) வழங்கினால் மட்டுமே மின்இணைப்பு வழங்கப்பட வேண்டும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாரிகள், முறைகேடாக ஒப்புதல் வழங்கி விதிமுறை மீறல் வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தடுக்க தற்போது மாநகராட்சி புதிய ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், கட்டிட வரைப்படத்தில் உள்ளபடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி அல்லது உதவி ஆணையாளர் அளவிலான அதிகாரிகள் உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதித்த வரைப்படம் அனுமதி அடிப்படையில் அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தபிறகே நேரடி ஆய்வு செய்து அதற்கான கட்டிட நிறைவு சான்றிதழ்( completion certificate) வழங்க வேண்டும் என்ற கிடுக்கி பிடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவர் கட்டிடங்களை அதன் அடித்தள கட்டுமானப் பணியில் இருந்தே நேரடியாக கண்காணித்து மாநகராட்சி பணி நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மின்வாரியமும், முறையான பணி நிறைவு சான்றிதழ் இல்லாமல் குடியிருப்பு, வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என்று கெடுபிடி காட்டத்தொடங்கிவிட்டது. அதனால், விதிமுறைகளை மீறி குடியிருப்பு, வணிக கட்டிடம் கட்டியவர்கள் தற்போது தங்கள் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் கூறுகையில், ‘‘வணிக கட்டிடங்கள் மட்டுமில்லாது குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சதுர அடியில் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. விதிமுறை மீறல் இருந்தால் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது ’’ என்றார்.

x