பிஹார் அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. முதல்வர் நிதீஷ் குமாருக்கு மிக நெருக்கமான தலைவராக இருந்த ஆர்.சி.பி.சிங் (ராமசந்திர பிரசாத் சிங்), ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியிருக்கிறார். கூடவே, பொறாமை காரணமாகத் தன் மீது ஊழல் புகார் சுமத்தியதாக நிதீஷ் குமார் மீது சரமாரியான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்.
பின்னணி என்ன?
பிஹார் கூட்டணி அரசில் இடம்பெற்றிருக்கும் பாஜகவுடன், முதல்வர் நிதீஷ் குமாருக்குப் பல்வேறு விவகாரங்களில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்தச் சூழலில், பாஜகவுடன் ஆர்.சி.பி.சிங் நெருக்கம் காட்டுவதாக நிதீஷ் குமார் அதிருப்தியில் இருந்தார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் எனும் அளவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த ஆர்.சி.பி.சிங், நிதீஷ் குமாரிடம் ஒப்புதல் கேட்காமலேயே மோடி அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றது அவரைக் கோபத்தில் ஆழ்த்தியது. 2011 முதல் 2022 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆர்.சி.பி.சிங். அதன் பின்னர் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை மறுத்துவிட்டது. இதனால், மத்திய எஃகு துறை அமைச்சராக இருந்த அவர் பதவிவிலக நேர்ந்தது.
இந்தச் சூழலில், சமீபத்தில் வெளியான காணொலி ஒன்று மேலும் அனல் மூட்டியது. அதில் பிஹாரின் அடுத்த முதல்வர் தான் தான் என ஆர்.சி.பி.சிங் முழக்கமிடும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, இதுவரை அவர் சேர்த்த சொத்து விவரங்களை அளிக்குமாறு கட்சி மேலிடம் அவருக்குக் கடிதம் அனுப்பியது. பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டிருப்பது தொடர்பாகப் புகார்கள் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கட்சித் தலைமை சுட்டிக்காட்டியிருந்தது.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆர்.சி.பி. சிங் நேற்று விலகினார். கட்சித் தலைமையின் கடிதம் தன்னை இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் குமுறிவருகிறார்.
“இந்தச் சொத்துக்கள் எல்லாம் என் மனைவி மற்றும் மகள்கள் சம்பாதித்தவை. 2010 முதல் அவர்கள் வருமான வரி செலுத்திவருகிறார்கள்” என்று கூறியிருக்கும் அவர், “என் மகள்களைக் குறிவைக்கும் அளவுக்கு நிதீஷ் குமார் தரம் தாழ்ந்துவிட்டார். நான் மத்திய அமைச்சரான பின்னர் என் மீது அவருக்குப் பொறாமை. ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல், ஏழேழு ஜென்மத்துக்கும் நிதீஷ் குமாரால் பிரதமராக முடியாது. அவர் பழிவாங்கும் குணம் நிறைந்தவர்” என்று சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.
இனி என்ன?
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவரான ஆர்.சி.பி.சிங் விலகியிருப்பது, அக்கட்சிக்குள் பலத்த அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பட்னாவில் கட்சியின் தேசியத் தலைவர் லலன் சிங் தலைமையில் முக்கியக் கூட்டம் நடத்தப்படுகிறது.
நாளந்தா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தங்கியிருக்கும் ஆர்.சி.பி.சிங், அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அவர் பாஜகவில் இணைவாரா என்றும் ஊகங்கள் எழுந்திருக்கின்றன.