இந்தியாவின் அரசுப் பள்ளி மாணவர்கள் 750 பேர் இணைந்து உருவாக்கிய 'ஆசாதிசாட்' எனும் செயற்கைக்கோள் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 75 அரசுப் பள்ளிகளிலிருந்து சுமார் 750 மாணவிகள் இந்தத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் மதுரை திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகளும் அடக்கம்.
இந்த மாணவர்கள் இணைந்து 8 கிலோ எடைகொண்ட ‘ஆசாதிசாட்’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கினர். இதைத் தயாரிக்கும் பணி கடந்த பிப்ரவரியிலிருந்து நடைபெற்று வந்தது. செயற்கைக்கோள் முழுமை பெற்ற பிறகு இன்று காலை விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9:18 மணிக்கு ஏவப்பட்ட செயற்கைக்கோள் 13.3 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து சுமார் 356 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
ஆறு மணி நேர கவுன்டவுன் காலை 3.18-க்குத் தொடங்கிய நிலையில் காலை 9.18-க்கு செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எஸ்எஸ்எல்வி வகையிலான ராக்கெட் இந்த எடை குறைந்த செயற்கைக்கோளைத் தாங்கி செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தச் செயற்கைக்கோளுடன் ஐஓஎஸ் 2 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது. சிறிய ராக்கெட் ரகமான எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.