காமன்வெல்த் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்ட மகளிர் டி20 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 31 பந்துகளுக்கு 61 ரன்கள் விளாசி வலுவான அடித்தளத்தை அமைத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 44 ரன்களையும் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.
165 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நடாலீ சிசிவெர் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.