நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சினைக்கு யார் பொறுப்பு? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி


புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின்போது, வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக தேர்வு முடிவுகள் வெளியானபோது, ஒரே நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 799 மதிப்பெண்கள் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்புக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். “வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாக எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? அவர்கள் எந்தெந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதா? வினாத்தாள் கசிய விட்டவர்களை கண்டறிந்த பிறகும், அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளதா? வினாத்தாள் கசிந்தது உண்மைதானா?

நாம் தற்போது மிக முக்கியமான பெருமிதம் வாய்ந்த கல்வி குறித்த பிரச்சனையை கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு நடுத்தர வர்க்க பெற்றோரும் தங்கள் குழந்தை மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். இந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டால் எப்படி பயனாளிகளை கண்டறிய முடியும்? கவுன்சிலிங் நடத்த அனுமதி வழங்கப்பட்டால், தற்போது வரை நடைபெற்று இருக்கக்கூடிய தவறுக்கு யார் பொறுப்பேற்பது?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தேசிய தேர்வு முகமை வழக்கறிஞர், நீட் வினாத்தாள் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கசிந்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து வினாத்தாள்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது எனவும், வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு எப்படி இந்த வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து வழக்கை வருகிற ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் மத்திய அரசு உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கான சுருக்கமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கூறி உத்தரவிட்டார்.

x