'எட்டு வருடங்களாக அடி, உதை... என்னால் தாங்க முடியவில்லை’


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவந்த இந்தியப் பெண் ஒருவர் தனது கணவரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண் குழந்தை பெற்றுத் தராதது உள்ளிட்ட பழிகளைச் சுமத்தி கணவரும் அவரது குடும்பத்தாரும் இழைத்த கொடுமைகளால் மனமுடைந்த அந்தப் பெண், தன் வேதனையை இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவாக வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவரும் சீக்கிய சமூகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மன்தீப் கவுர். அவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் 2015-ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின்னர் கணவருடன் அமெரிக்காவுக்குச் சென்ற மன்தீப் கவுரின் மணவாழ்க்கை மிகக் கொடுமையானதாக அமைந்தது. இந்தத் தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை எனக் கூறி மன்தீப் கவுரை ராஜ்னோத்பீர் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்திவந்தனர்.

குறிப்பாக, குழந்தைகள் கண் எதிரிலேயே அவரது கணவர் அவரைப் பல முறை தாக்கியிருக்கிறார். இதற்கான வீடியோ பதிவுகளைத் தனது தோழிகளுக்கு அனுப்பிவந்ததாகத் தெரிகிறது.

ஒரு முறை ராஜ்னோத்பீர் சிங் ஒரு ட்ரக்குக்குள் தன்னை 5 நாட்கள் அடைத்துவைத்தது குறித்து தனது தந்தையிடம் மன்தீப் கவுர் தெரிவித்தார். இதையடுத்து ராஜ்னோத்பீர் மீது அவரது தந்தை போலீஸில் புகார் அளித்தார். அப்போது தன்னை மன்னித்துவிடுமாறு கணவர் கெஞ்சியதால் புகாரைத் திரும்பப் பெறச் செய்திருக்கிறார் மன்தீப் கவுர். அதன் பிறகும் கொடுமைகள் நிற்கவில்லை. கூடவே, ராஜ்னோத்பீருக்குத் திருமண உறவைத் தாண்டிய தவறான உறவும் இருந்திருக்கிறது.

“எட்டு வருடங்களாகத் தொடர்ந்து அடி உதை. என்றாவது ஒரு நாள் அவர் திருந்துவார் என எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். ஆனால், என்னால் இப்போது இவற்றைத் தாங்க முடியவில்லை” என்று இறுதியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் கண்ணீர் மல்கக் கூறியிருக்கும் அவர், தற்கொலை செய்துகொள்ளுமாறு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

மன்தீப் கவுருக்கு நேர்ந்த அவலம், வெளிநாடு வாழ் சீக்கிய சமூகத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீக்கிய சமூகப் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைக்கு எதிரான ‘தி கவுர் மூவ்மென்ட்’ அமைப்பு அவரது இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்திருக்கிறது. அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு சீக்கிய மகளிர் அமைப்பினர் சமூகவலைதளங்களில் குரல் எழுப்பிவருகின்றனர்.

மன்தீப் கவுரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் அவரது குடும்பத்தினர் இறங்கியிருக்கின்றனர்.

ராஜ்னோத்பீர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

x