`நீங்கள் செய்வது கருணாநிதிக்கு செய்யும் துரோகம்'- முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் விவசாயிகள்


பி ஆர் பாண்டியன்

``தமிழகத்தில் நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி மேற்கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல'' என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

16 நவீன அரிசி ஆலைகளில் தனியார்கள் மூலம் கொள்முதல் செய்து அரவை செய்து அரிசியாக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி மேற்கொண்டு வருவது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே தமிழக முழுமையிலும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார். தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கலைஞர் கொண்டு வந்த திட்டங்களையே ரத்து செய்வதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. இச்செயல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி கலைஞருக்கு செய்கிற துரோகமாகும் என்பதை உணர வேண்டும். சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்காமல், அரசியல் கட்சிகள், விவசாயிகளுடைய கருத்தை கேட்டறியாமல் தன்னிச்சையாக மறைமுகமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொள்முதலை கைவிட்டு இருப்பதை திரும்பப்பெற தமிழக அரசு முன்வர வேண்டும்.

காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரால் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வாழை, குறுவை நெல் நீர் சூழ்ந்து அழிவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். தற்போது குறுவைக்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கைவிட்டிருக்கும் நிலையில், அதற்கான மகசூல் இழப்பை கணக்கில் கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

x