குடியரசுத் துணைத் தலைவராகப் பதவிவகிக்கும் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா களம் காண்கிறார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (நியமன எம்.பி-க்கள் உட்பட) அனைவரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இரு அவைகளிலும் மொத்தம் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாநிலங்களவையில் தற்சமயம் 8 இடங்கள் காலியாக இருக்கின்றன.
தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மக்களவையில் 303 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து 353 உறுப்பினர்களுடன் அசுர பலத்தில் இருக்கிறது. மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு 91 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், ஜக்தீப் தன்கர் வெற்றி பெறுவது நிச்சயம் என்றே கருதப்படுகிறது.