தந்தையைக் கொன்றதாக மகன் சரணடைந்த வழக்கு: குடும்பமே சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்


கொலை செய்யப்பட்ட ஓமந்தூரார்

ஐந்து மாதங்களுக்கு முன்பு தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை சம்பவத்தில் மனைவி உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஓமந்தூரார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ஓமந்தூராரை அவரது 15 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கிரிக்கெட் மட்டையுடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இச்சம்பவத்தில் மகனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஓமந்தூரார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஓமந்தூராரின் தந்தை ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் மறு விசாரணை நடைபெற்று வந்தது.

இச்சூழலில், கொலை செய்யப்பட்ட ஓமந்தூராரின் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர்கள் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு பேரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து பேரும் ஓமந்தூராரை திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

கூடுதல் விசாரணையில், ஓமந்தூராரின் மனைவியான பாண்டீஸ்வரி பெயரில் சத்திரப்பட்டி மற்றும் பழநியில் சொந்த வீடு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஓமந்தூரார் அந்த இரு வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி அடிக்கடி மது போதையில் தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று பாண்டீஸ்வரியின் உறவினர்கள் தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் ஓமந்தூரர் மீண்டும் தகராறு செய்ததோடு, பாண்டீஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோருடன் சேர்ந்து பாண்டீஸ்வரியும், அவரது 15 வயது மகனும் ஓமந்தூராரை சரமாரியாக தாக்கி உள்ளனர். கிரிக்கெட் மட்டையை எடுத்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, 18 வயது உட்பட்டவர்களுக்கு, கொலை வழக்கில் தண்டனை குறைவு என்பதை அறிந்த தாய், தனது மகனை மட்டும் கொலை வழக்கில் சிக்க வைத்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாண்டீஸ்வரி, கிருஷ்ணவேனி, ராமையா, லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x