ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 45 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
ரூ.600 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர், ஜார்க்கண்ட் முதல்வராக ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் பதவி ஏற்று, ஆட்சியை நடத்தி வந்தார். இந்நிலையில் 5 மாத சிறைவாசத்துக்குப் பின்னர், அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28ம் தேதி சிறையிலிருந்து வெளிய வந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் முதல்வர் பதவியேற்க ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 4ம் தேதி, ஹேம்ந்த் சோரன் முதல்வராக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில் அம்மாநில சட்டப் பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜேஎம்எம் - 27, காங்கிரஸ் - 17 மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 1 என்ற அளவில் ஆளும் கூட்டணிக்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
பாஜக தலைமையிலான எதிர்க்கட்சியில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். சில உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பேரவையின் மொத்த பலம் 76 ஆகக் குறைந்தது. இதன் காரணமாக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலமும் 38 ஆகக் குறைந்தது. இந்நிலையில் போதிய பெரும்பான்மை இருந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.