கொட்டித் தீர்த்த மழை; பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை: பெண் கலெக்டருக்கு எதிராக பெற்றோர்கள் வழக்கு


எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியர் ரேணுராஜ்

கனமழையில் பள்ளி விடுமுறையை தாமதமாக அறிவித்ததாக எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியர் ரேணுராஜிற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. மாநிலம் முழுவதும் மழைக்கு 40க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். கனமழையின் காரணமாக கேரளத்தில் பல மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாக்குளம் மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை அறிவித்தார் எர்ணாக்குளம் ஆட்சியர் ரேணுராஜ்.

ஆனால் ரேணுராஜ் விடுமுறை அறிவிப்பை காலை 8.30க்குத்தான் கொடுத்ததாகவும், ஆனால் பல பள்ளிக்கூடங்கள் காலை 8 மணிக்கே தொடங்கிவிடும் என்பதால் பல மாணவ, மாணவிகளும் அதற்கு முன்பே கிளம்பிச் சென்றுவிட்டனர் என பெற்றோர்கள் சிலர் சேர்ந்து எர்ணாக்குளத்தில் இருக்கும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவில் ஆட்சியர் உரிய நேரத்தில் விடுமுறை அளிக்கவில்லை. பேரிடர் நேரங்களில் விடுமுறை குறித்து மாநில அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஆட்சியர் தரப்பில், “மழையில் கிளம்பி சென்றவர்களை பாதுகாப்பாக பள்ளியிலேயே பெற்றோர் வரும்வரையோ, நண்பகல் வரையோ வைத்திருக்க பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

x