சவுதி அரேபியாவில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி


கேரளத்தில் மேலும் ஒருவருக்கு இன்று குரங்கு அம்மை நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கேரளத்தில் மூவரும், டெல்லியில் ஒருவருமாக நான்குபேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட மூவரும் வெளிநாடு சென்று வந்தவர்கள் ஆவார்கள். ஆனால், டெல்லியில் பாதிக்கப்பட்டவர் வெளிநாடு சென்று வராதவர் ஆவார். கேரளத்தில் ஒருவர் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், கேரளத்தில் 22 வயதான திருச்சூர் வாலிபர் ஒருவர் குரங்கு அம்மையால் சிலதினங்களுக்கு முன்பு பலியானார். இவருக்கு அறிகுறிகளே இன்றி குரங்கு அம்மைத் தாக்கியிருந்தது. அவரது மாதிரிகள் பெறப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டே குரங்கு அம்மை உறுதிசெய்யப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கடந்த 21-ம் தேதி கேரளம் வந்த அந்த இளைஞருக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் கடுமையான காய்ச்சல் இருந்துவந்தது. அவர் 27-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென இறந்துபோனார். அதன்பின்பு கேரளத்தில் அனைத்து விமானநிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தீவிர சோதனைக்குப் பின்பே கேரளத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று சவுதி அரேபியாவில் இருந்து கேரளத்தின், கொச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார். எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

x