கச்சநத்தத்தில் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் புகுந்த ஒரு குடும்பல், கிராம மக்களை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக அருகில் உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ், பிரசாந்த் உள்ளிட்ட 33 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதில், அக்னிசாமி, பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். ஆனால், தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக வழக்கு நீதிபதி முன்பு வந்தபோது, ஆகஸ்ட் 5-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக வழக்கினை ஒத்திவைத்தார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 27 பேருக்கும் இன்று தண்டனை விவரங்களை அறிவித்தார் நீதிபதி முத்துக்குமரன். அதன்படி, 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவர்கள் இதனை ஏக காலத்திற்கு அனுபவிக்குமாறும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.