பாஜகவில் உடனடியாக இணைய திட்டமில்லை... கே.எஸ்.ஈஸ்வரப்பா பரபரப்பு பேட்டி


கே.எஸ்.ஈஸ்வரப்பா

பாஜகவில் உடனடியாக இணையம் திட்டமில்லை என கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வராகவும், பாஜக மூத்த தலைவராகவும் இருந்தவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் ஹவேரி தொகுதியில் தனது மகன் கே.ஈ.கந்தேஷ் போட்டியிட ஈஸ்வரப்பா வாய்ப்பு கோரி இருந்தார். ஆனால், பாஜக மாநில தலைவர் பி.ஓய்.ராகவேந்திரா அந்த வாய்ப்பை வழங்க மறுத்து விட்டார். அத்துடன் அவர் போட்டியிட்ட ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கே.எஸ்.ஈஸ்வரப்பா போட்டியிட்டார். பாஜக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவையும், கட்சியையும் கே.எஸ்.ஈஸ்வரப்பாக கடுமையாக விமர்சனம் செய்து, வேட்புமனுவையும் வாபஸ் பெற மறுத்து விட்டார். இதன் காரணமாக பாஜகவில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பா நீக்கப்பட்டார். இந்த தேர்தலில் ஈஸ்வரப்பா தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் கே.எஸ்.ஈஸ்வரப்பா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியலின பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நடந்த ஊழலில் முதல்வர் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாக உடனடியாக பதவி விலக வேண்டும்.

இந்து சமுதாயத்தை நேரடியாக விமர்சிக்க யாருக்கும் துணிவில்லை. ஆனால், தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்து மதத்தை விமர்சித்து வருகிறார். பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காததால் ராகுல் காந்தி மகிழ்ச்சியடைந்துள்ளார். ராகுல் காந்தி இந்துக்களை புண்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவிக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர் நடந்து கொள்ள வேண்டும். பாஜகவில் உடனடியாக இணையும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.

x