விபரீத செயலில் ஈடுபட்ட இளைஞர்; அடித்துச் சென்ற நீர்வீழ்ச்சி: 2-வது நாளாக தேடுதல் வேட்டை!


தவறி விழும் அஜய் பாண்டி

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞரை தேடும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இரண்டாவது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், மணலூர் ஊராட்சியில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. தொடர் மழை காரணமாக இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மிகவும் ஆபத்தான பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சியான இங்கு, தண்ணீர் விழும் இடத்திலிருந்து 100 அடிக்கு அப்பால் சுமார் 1,200 அடி பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். வார இறுதி நாட்களில் பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இரண்டாவது நாளாக தேடும் தீயணைப்பு துறையினர்

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டி தாண்டிக்குடி மலைப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இவர் தனது நண்பர் கல்யாணசுந்தரத்துடன் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு நேற்று வந்துள்ளார். அப்போது, புகைப்படம் எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நின்ற போது கால் தவறி அருவியில் விழுந்த அஜய் பாண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் நேற்று அஜய் பண்டியை தேடும் முயற்சியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவரது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

x