புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில், உக்ரைனுடனான போரில் ரஷ்ய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை பிரதமர் உறுதிப்படுத்துவாரா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலைக்கு என ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர், அந்நாட்டு ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுடான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என வெளியுறவுத் துறை தரப்பிலிருந்து ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சூழலில் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
2019-க்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்தும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடங்கிய பிறகு ரஷ்யா செல்வதுமாக பிரதமர் மோடியின் பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் போர் முனையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை பிரதமர் மோடி உறுதி செய்வாரா என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பல தசாப்தங்களாக பல்வேறு காங்கிரஸ் அரசுகளின் புத்திசாலித்தனமான ராஜதந்திரம் மற்றும் ராஜீய முன் முயற்சிகள் காரணமாக இந்தியா முதலில் சோவியத் ஒன்றியத்துடனும், பின்னர் ரஷ்யாவுடனும் வளமான உறவைப் பெற்றது.
மிக சமீபத்தில், பிரதமராக தனது 10 ஆண்டுகளில், டாக்டர் மன்மோகன் சிங், விளாடிமிர் புதின் மற்றும் டிமிட்ரி மெட்வெடேவ் (அவரது பதவிக்காலத்தில் பணியாற்றிய ரஷ்யாவின் இரண்டுஅதிபர்கள்) ஆகியோரை இந்தியா அல்லது ரஷ்யாவில் 16 முறை சந்தித்தார். அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நடத்தும் 11வது சந்திப்பு இதுவாகும்.
மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக தகவலின்படி, ரஷ்ய ராணுவத்தில் குறைந்தது 50 இந்தியர்கள் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் (இந்தியர்கள்) ஏற்கெனவே போரில் இறந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் அவதார பிரதமர் இந்த இளைஞர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதை உறுதி செய்வாரா?” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.