கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இன்று வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டுக்குக் கொண்டு சென்றால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை பகவானின் பாதத்தில் வைத்து பூஜை செய்வதே நிறை புத்தரிசி பூஜை எனப்படுகிறது. இதனால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இறைவனின் சந்நிதியில் பூஜையில் வைக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் நெற்கதிர்களை வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதன் மூலம் ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நெற்மணிகளை வயலில் உதிர்த்து போட்டு பயிர்செய்தால் பயிர்கள் செழிக்கும் என்பதும் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் நிறை புத்தரிசி பூஜை குமரிமாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோயில்களில் நடடைபெறும்.
சபரிமலை அய்யப்பன் கோயிலிலும் இன்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் என குமரிமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து ஆலயங்களிலும் நிறைபுத்தரிசி பூஜை நடந்தது.
அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. நந்தவனத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட நெற்கதிர்கள் உதயமார்த்தாண்ட மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த நெற்கதிர்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.