துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த போலீஸ்காரரின் 2 கண்களும் தானம்: அரசு மருத்துவமனைக்கு வழங்கிய பெற்றோர்


துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவலர் செந்தில்குமாரின் இரு கண்களையும் அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை கடந்த 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 10-ம் தேதி செஸ் போட்டி நிறைவடைவதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி இந்த அரங்கிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் (31) கடந்த 13-ம் தேதி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு திருமணமாகி உமாதேவி என்ற மனைவியும், 11 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

சென்னை எழும்பூரில் குடும்பத்துடன் தங்கியிருந்த செந்தில்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி உமாதேவி நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் பழநிக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமார் மன உளைச்சல் அடைந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல பணிக்குச் சென்ற செந்தில்குமார் தான் வைத்திருந்த எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியால் மார்பில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

செந்தில்குமார்

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கமாண்டர் ராமமூர்த்தி ஓடிவந்து போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் வெளியே வந்த செந்தில்குமார் மீண்டும் சுட்டுக்கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் கையில் இருந்த துப்பாக்கியை கமாண்டர் ராமமூர்த்தி பறித்துள்ளார். ஆயினும் சில நொடிகளில் காவலர் செந்தில்குமார் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக செந்தில்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் ,மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சென்னைக்கு வந்த அவரது பெற்றோர், ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று தங்களது மகனின் இரு கண்களையும் தானமாக எழுதிக் கொடுத்தனர். உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது இரு கண்களையும் பாதுகாப்பு எடுத்தனர். இதன் பின் செந்தில்குமார் உடல் அவரது சொந்த ஊரான மதுரை செல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

x