வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் பூச்சி மருந்து குடித்து கர்நாடகாவில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள தாவண்கெரே மாவட்டம் நியாமதி தாலுகா பெலகுத்டித கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரராஜ் அரஸ் (60). விவசாயியான இவர் அந்த பகுதியில் உள்ள பெலகுட்டி கிரிஷி பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ.2 லட்சம், எல்என்டி பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம், கிராமின் கூடா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம், தர்மஸ்தலா சங்கத்தில் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் விவசாயத்திற்காக கடன் வாங்கியிருந்தார். வறட்சியால் பயிர்கள் காய்ந்ததால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் அரஸ் தவித்து வந்தார்.
கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அரஸ் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து அரஸ் இன்று தற்கொலை செய்து கொண்டார். நியாமதி காவல் நிலைய போலீஸார், சோமசுந்தர ராஜ் அரஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அரஸ் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024- ஆண்டுக்கு இடையில் 692 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.