விவேகானந்தர் பாறை அருகே கொட்டும் மழையில் நடனம், தியானம், தவம்: அசத்திய அந்த சிறுவன் யார்?


கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு நேர் எதிரில் உள்ள கரைப்பகுதி மதில் சுவர் மேல் ஏறி நின்ற சிறுவன் கொட்டும் மழையில் நடனம், தியானம், தவம் என செய்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தினமும் ஏராளமான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது வழக்கம். குமரிமாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக மழை பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது. அதேபோல், குமரியில் கனமழையின் காரணமாக நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி கடலுக்கும், பகவதி அம்மன் கோயிலுக்கும் இடையே மதில் சுவர் ஒன்று உண்டு. அந்த சுவரில் விவேகானந்தரின் நினைவு மண்டபத்திற்கு நேர் எதிரில் நேற்று மாலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஏறி நின்ற சிறுவன் அங்கிருந்தே ஆடவும் தொடங்கினார். ஒற்றைக் காலில் நின்றபடி தவம், தியானம், யோகா என சில விஷயங்களைச் செய்தார். இதைப்பார்த்த கடற்கரையில் கடை போட்டிருக்கும் வியாபாரிகள் சிலர் இதை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர். அந்தப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த சிறுவன் யார்? ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. கன்னியாகுமரி கடலுக்கு வந்த சுவாமி விவேகானந்தர் நீந்தியே பாறையில் ஏறிநின்று தவம் செய்தார். அந்தப்பாறையே விவேகானந்தர் மண்டபம் ஆகியுள்ளது. அதன் எதிரே நின்று நடனம் ஆடி, தியானம், யோகாவெல்லாம் செய்து சென்றிருக்கும் இந்தச் சிறுவனைப் பற்றிய விவரங்களும் யாருக்கும் தெரியவில்லை.

கொட்டும் மழையில், இடி, மின்னலுக்கு மத்தியில் இப்படி விபரீத விளையாட்டில் ஈடுபட்ட சிறுவனைப் பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x