2026-க்கு பிறகும் என்.ஆர்.காங் - பாஜக கூட்டணி தொடரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேட்டி


"2026 ம் ஆண்டு தேர்தலில் மட்டுமல்ல அதற்கு அடுத்த ஆண்டுகளிலும் கூட்டணி என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி தொடரும்" என்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் கூட்டணி குழப்பத்திற்கு காரணமாகி விட்டது. காங்கிரசிடம் ஆளுங்கட்சியான பாஜக தோற்றதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி மற்றும் பாஜ அமைச்சர்களுக்கு எதிராக பதவியில் இல்லாத பாஜக எம்எல்ஏ-க்கள் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏ என 7 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதில் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான அங்காளன் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். கூட்டணி தர்மத்தை முதல்வர் மீறி விட்டதால் கூட்டணியை விட்டு வெளியே சென்று விடலாம் என அதிருப்தி எல்எல்ஏ-க்கள் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் டெல்லி சென்று வலியுறுத்திவிட்டு வந்தார்கள். இந்தநிலையில் புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார். அவர் எம்எல்ஏ-க்களின் புகார்கள் தொடர்பாகவும் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், தேர்தல் தோல்வி குறித்தும் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் இன்று புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜகவினருடன் சுரானா தனித்தனியாக பேசி வருகிறார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் செல்வகணபதி, பேரவை தலைவர் செல்வம் ஆகியோருடன் தனித்தனியாக பேசினார். அடுத்து பாஜக எம்எல்ஏ-க்கள் ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோருடன் பேசி உள்ளார்.ஆனால், நண்பகல் 12.15 மணி வரையிலும் அதிருப்தி பாஜக எம்எல்ஏ-க்கள் வரவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுரானா, “பாஜக மக்களவை தேர்தலில் தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். வரும் காலங்களில் கடினமாக உழைப்போம். தவறுகளை சரி செய்வோம். புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளுக்கும் பாஜகவின் சின்னம் புதிது. அடுத்து வரும் தேர்தல்களில் கூடுதலாக வெற்றி பெறுவோம்.

பாஜக தேசிய தலைவரிடம் புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் புகார் ஏதும் கூறியதாக தெரியவில்லை. மாநில அரசு செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்று தான் கூறியுள்ளனர். புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளனர். பாஜக - என்.ஆர்.காங் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. 2026-ல் மட்டுமல்ல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்தக் கூட்டணி தொடரும். இன்றைய கூட்டத்துக்கு அருப்தி எம்ஏல்ஏ-க்கள் வராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்துப் பேசவிருக்கிறேன்” என்றார்.

x