முழுக் கட்டணத்தையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு


அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினால் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுவதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்சி 12 பொதுத் தேர்வு முடிவை அண்மையில் வெளியிட்டது மத்திய கல்வி வாரியம். முன்னதாக, சிபிஎஸ்சி 12 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், உயர் படிப்புகளுக்கான கலந்தாய்வை தொடங்க வேண்டாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது யுஜிசி. தற்போது, உயர் கல்வி படிப்புக்கான கலந்தாய்வு தேதியை தமிழக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சியுஇடி தேர்வு வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் 15 நாட்களுக்கு பிறகு வெளியாக இருக்கிறது. இதே நேரத்தில், நீட் நுழைவுத்தேர்வு முடிவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது யுஜிசி.

அதில், "கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் வேறு கல்லூரிக்கு மாற விரும்பினால் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை முழுமையாக திரும்பித் தர வேண்டும். மேலும், சேர்க்கையை ரத்து செய்வதற்கு என தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அக்டோபர் வரையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்" என கூறப்பட்டுள்ளது.

x