அரசு நிலத்தை மோசடி செய்து விற்பனை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் 5 பேர் சிக்கினர்!


வீட்டுமனைப் பிரிவுகளில் பொதுப் பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்டதான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில், 5 அரசு அதிகாரிகளை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. இந்த மனைப்பிரிவிற்கு பொதுப் பயன்பாட்டிற்காக 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்குப் பதிவு செய்து கொடுத்தனர். பின்னர் அந்த நிலங்களை ‘விஜிபி’ அமலதாஸ் ராஜேஷ் மோசடி செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை, காஞ்சிபுரம் நிலம் எடுப்பு பிரிவு வட்டாட்சியர் எழில்வளவன், ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் பார்த்தசாரதி மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று இரவு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மற்றொரு நிலமோசடி வழக்கில் அமலதாஸ் ராஜேஷ், சார்பதிவாளர்கள் சுரேஷ் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

x