காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்


தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிய நிலையில், அவரை நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியவரை விரட்டிச் சென்ற போலீஸ் விக்கிரவாண்டி அருகே கைது செய்துள்ளது. திரைப்படத்தை மிஞ்சிய விறுவிறுப்பான சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.

விக்னேஸ்வரன்

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்படி வந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் ஒரு கட்டத்தில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண்ணின் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் விக்னேஸ்வரன் ஓய்ந்தபாடில்லை. அதன்பின்னர் கடந்த ஜூலை 12-ம் தேதி நண்பர்களுடன் வந்த விக்னேஸ்வரன் அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்து அப்போதும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸார் விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் கதறகதற பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து அந்த கார் சென்னையை நோக்கி சென்று கொண்டிருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற போலீஸார் விக்கிரவாண்டி சோதனைச்சாவடி அருகே காரை மறித்தனர். அதிலிருந்த இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் அவரை கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீஸார் அனைவரையும் மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்ற சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

x