காவிரியில் பாய்கிறது 1.40 லட்சம் கன அடி நீர்: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரத்தில் 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, சிறிது சிறிதாக அதிகரித்து தற்போதைய நிலையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி விட்டதால் மேட்டூருக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

இதனால் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓட தொடங்கியிருக்கிறது. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இன்று ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரம் நின்று செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட செயல்களை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் வெள்ளம் அதிகரித்துள்ள நிலையில் அது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு கடலுக்கு அனுப்பப்படும் என்பதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் உள்ள கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றுக்குச் சென்று குளித்து காவிரித்தாயை வழிபடும் டெல்டா பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

x