தர்மருக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பட்டாபிஷேக திருவிழா


விழுப்புரம் அருகே 60 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் பட்டாபிஷேக திருவீதி உலா நடைபெற்றது.

விழுப்புரம் அருகே மேல் பாதி கிராமத்தில் தர்மராஜா திரௌபதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை தர்மர் பட்டாபிஷேபிக திருவிழா நடைபெறும்.

இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 5 ஆயிரம் பிரிவு தொகை வழங்கவேண்டும் என கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன் படி குறைந்தபட்ச தொகை ரூ 5 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான ரூபாயை இத்திருவிழாவிற்காக கிராமமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமமக்களும் நன்கொடை அளித்துள்ளனர்.

இத்தொகையைகொண்டு கிராமத்தில் உள்ள பிரதான சாலை, திரௌபதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரைஸ்மில் தெரு என 6 தெரு முழுவதும் சுமார் 20 அடி உயரத்திற்கு தென்னங்கீற்று பந்தல் போடப்பட்டது. இன்று காலை 6.50க்குள் தர்மருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தர்மர், கிருஷ்ணர், திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள், காத்தவராயன் ஆகியோர் யானைப்படை, குதிரைப்படை அணிவகுக்க, கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்கால் குதிரை, சென்டை மேளம்,, உருமி மேளம் முழங்க கிராமமக்கள் பின் தொடர வீட்டுக்கு வீடு கற்பூர ஆராதனை காட்டபட்டு, வீதி உலா நடைபெற்றது.
காலை தொடங்கி மாலைவரை அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி அக்கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமமக்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வளவனூர் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தி இருந்தனர். முன்னதாக கடந்த 23-ம் தேதி முதல் இன்று வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் இக்கிராமத்தில் 33 அடி உயரமுள்ள தேரை இக்கிராமமக்கள் தோளில் தூக்கிவைத்தபடி வீதி உலா வருவார்கள். இதனை தொடர்ந்து தீ மிதி நடைபெற்றுவருகிறது என்பதும், அடுத்த தர்மர் பட்டாபிஷேக விழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் என்று இக்கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

x