மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்க ஒப்பந்த புள்ளி திடீர் ரத்து: தமிழக அரசு சொல்லும் காரணம் என்ன?


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை அலங்காநல்லூரில் அமைய இருந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை ஒட்டி தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், அலங்காநல்லூரில் நடக்கக்கூடிய ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நிரந்தரமாக ஒரே இடத்தில் நடத்தும் வகையில், மதுரையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் அருகே சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடம் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.

மேலும், அமைச்சர்கள் இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கடந்த 7-ம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளியினை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிர்வாக காரணங்களுக்காக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கென்று பிரத்யேகமாக அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

x