அசாமில் வெள்ளம், மணிப்பூரில் இனக்கலவரம்: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க புறப்பட்டார் ராகுல் காந்தி


புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி-யும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அசாம் வெள்ளம் மற்றும் மணிப்பூரில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 22.70 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலில் மொத்தம் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அசாம் மாநிலத்துக்கு இன்று சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தெற்கு அசாமின் சில்சாரில் உள்ள கும்பிர்கிராம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராகுல் காந்தியை அசாம், மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர்.

பின்னர் அவர் கச்சார் மாவட்டம், லக்கிப்பூர் பகுதியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மணிப்பூரின் ஜிரிபாம் நகருக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்து பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து உரையாடினார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி வடகிழக்கு மாநிலங்களுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். ராகுல் காந்தி ஜிரிபாமில் இருந்து அசாமில் உள்ள சில்சார் விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பினார். பின்னர், அவர் மணிப்பூர் மாநிலம், இம்பாலுக்கு விமானம் மூலம் செல்கிறார்.

கடந்த ஆண்டு மே 3 முதல், மணிப்பூரில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே இன கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்த மோதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில், அசாம் வெள்ளம் மற்றும் மணிப்பூர் இன கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.

x