சென்னை ஐஐடியில் நள்ளிரவில் மாணவிக்கு நடந்த பயங்கரம்: போலீஸாரின் பிடியில் பிஹார் வாலிபர்


சென்னை ஐஐடி வளாகத்தில் நள்ளிரவில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த உணவக ஊழியரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு மாணவி ஒருவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார். இதனால் பதற்றமடைந்த மாணவி உதவி கேட்டு கூச்சலிட்டும் யாரும் வராததால், மாணவி அந்த நபருடன் சண்டையிட்டு தன்னைக் காப்பாற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மாணவி காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. இதனையடுத்து மாணவியின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐஐடியில் வேலை பார்க்கும் வட மாநில நபர்கள் யாராவது இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகித்து 300 பேரின் புகைப்படங்களை மாணவியிடம் காண்பித்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் அந்த நபரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் சம்பவத்தன்று ஐஐடியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 35 ஊழியர்களையும் அழைத்து ஐஐடி நிர்வாகம் அடையாள அணிவகுப்பு நடத்தியது.
இதுகுறித்து ஐஐடி நிர்வாகம் கூறுகையில், ஐஐடி வளாகத்தில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உதவி தேவைப்படும் நேரத்தில், ஊழியருடன் பேருந்தை அழைக்கும் வசதியும் உள்ளது. இரவு நேரங்களில், ஐஐடி, வளாகத்தில் தனியாக பயணிக்கும் மாணவியர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். துரிதமான உதவிக்கு பாதுகாப்பு பிரிவை உடனே அணுக வேண்டும். செல்போன் செயலி வாயிலாக பாதுகாப்பு அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தது. மேலும் சுமார் 600 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் பாதுகாப்பு அளிப்பது சவாலாக உள்ளது. பட்டி சிஸ்டம் (buddy system) என்ற முறையில் நண்பர்களை உடன் அழைத்து செல்லுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐஐடி நிர்வாகத்தின் இந்த பதிலுக்குப் பலதரப்புகளில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஐஐடி நிர்வாகம், இதுபோன்று பாலியல் தொந்தரவு தொடர்பான புகாருக்கு மாணவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதில் அளித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஐஐடி வளாகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளிக்க அச்சப்படுவதாக காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் மற்றும் கோட்டூர்புரம் போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐஐடி வளாகத்தில் ஜூஸ் கடை நடத்தி வரும் பிஹாரைச் சேர்ந்த சந்தன்குமார்(24) என்பவரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x